Monday, December 31, 2007

காதலும்...கவிதையும்...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இந்த வருடத்தின் முதல் பதிவு.




வானில் நீலம் இருக்கும் வரை
நிலவில் கறை நீங்கும் வரை
கடலின் அலை ஓயும் வரை
பூமி அமைதியில் நிற்கும் வரை
என் நிழல் உன்னை விட்டு பிரியும்வரை
விரல்கள் உன்னைப்பற்றி கவி வரைந்துகொண்டே இருக்கும்
இதயம் காதல் வளர்த்துக் கொண்டே இருக்கும்...


அன்புடன்
கருணா

Monday, December 10, 2007

சுவடுகள்-III

மூன்றாமாண்டு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு கணக்கை தொடங்கினோம்.

இந்த ஆண்டு கொஞ்சம் முன்னேறி நானும் கரனும் 2 ம் பெஞ்சில் இடம் பெயர்ந்தோம், அதே இரண்டாம் பெஞ்சில் கோபு, ஆனால் அடுத்த வரிசையில் பத்மஸ்ரீ ராஜாமணியோடு. ஆம் எப்போதும் அவன் தன்னை இப்படித்தான் கூறிக் கொள்வான் ராஜாமணி.இவன் தன்னை பற்றி கூறும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு இவனுடன் இருக்கும்போது நேரம் போவதே தெரியாது. முதல் நாள் ஒன்றும் பெரிதாக வகுப்புகள் நடக்காததால் ஒரு மேட்ச் முடித்துவிட்டு கேன்டீன் அரட்டையுடன் ஒட்டினோம். ஒரு சில நாட்கள் ஓடியது.

எனக்கும் கரனுக்கும் இருக்கும் Lab சொந்தம் தொடர்ந்தது. 5 வது செமஸ்டர் எங்களுக்கு CAD lab உண்டு, ஆனால் இங்கு இரண்டு பேர்தான் ஒரு batch க்கு. அங்கேயும் நாங்கள் இருவர்தான் என எண்ணிக்கொண்டு lab க்கு நுழைந்தோம். அந்த Lecturer உள்ளே நுழைந்ததும் ஒரு அறிமுகம் செய்துவிட்டு "யாருக்கெல்லாம் இங்க CAD ஏற்கனவே தெரியும்" என கேட்டார். இரண்டாமாண்டு விடுமுறையை சும்மா கழிக்க வேண்டாம் என்று நாங்கள் மூவர் கூட்டத்தோடு CAD class போனோம், அதில் எதோ எங்களுக்கும் கொஞ்சம் தெரியும் என்று கூற எங்களைப் போலவே ஒரு பாதி கூட்டம் கை உயர்த்தியது. உடனே அவர் "சரிப்பா CAD தெரிஞ்சவங்கலாம் தெரியாதவங்ககூட batch சேருங்க so நீங்க அவங்களுக்கு சொல்லி கொடுத்த மாதிரி இருக்கும், சீக்கிரம் excercise முடிச்சிடலாம்" என்று சொன்ன அடுத்த நொடியே லாவண்யா என்னிடம் வந்து "கதிர் நாம ரெண்டு பெரும் ஒன்னா செய்யலாமா, உனக்குத்தான் தெயரியும்ல",என்றால். அவளிடம் பேச நினைத்துக் கொண்டிடுந்த கனவுகள் மீண்டும் உயிர்த்தெழுந்தது. நான் உடனே சரி என்று சொல்லாமல், ஓரக்கண்ணில் கரனையும்,கோபுவையும் பார்த்தேன். அவர்களிடம் போய் "என்ன மச்சான் யார்கூட பண்ண போறோம்" என்றேன். "இல்லடா நான் லக்ஷ்மணன் கூட பண்ணலாம்னு இருக்கேன், கோபு வந்து கிரி கூட பண்ண போறானாம், நீ வேணும்னா நம்ம கார்த்திகூட செய்யேன்" என்றான். "இல்லடா லாவண்யா என்கூட join பண்ண என்கிட்டே கேட்டா, நான் ஒண்ணும் சொல்லல, அதான் உங்ககிட்ட..." என இழுத்தேன். "அப்பறம் என்னடா போய் jolly பண்ணுடா, Lab மட்டும் பண்ணுடா, நீயும் கோபு மாதிரி ஆகிடப்போற, அப்பறம் நான் மட்டும் தனியா மரத்துக்கிட்டதான் பேசிகிட்டு இருக்கணும்" என சொன்னான்.

என் பதிலுக்கு காத்திருந்த அவளிடம் "சரி லாவண்யா நாம 2 பெரும் சேர்ந்து பண்ணலாம்" என்று கூறி காரனுக்கு அடுத்த கணினியில் நான் அமர்ந்தேன், எனக்கு வலமாக அவள். பேச வாய்ப்பு கிடைத்தும், வெறும் பாடத்தைப் பற்றி மட்டும் பேசிவிட்டு, அவளை செய்ய சொல்லிவிட்டு, நண்பர்களுடன் அரட்டையை தொடர்ந்தேன். 3 வார lab இப்படியே போனது. அடுத்த வாரம் அதே lab ல் லாவண்யா எதோ செய்து கொண்டிருக்க , நானும் கரனும் ஏதோ அலசிக் கொண்டிருந்தோம். HOD யிடமிருந்து அவனுக்கு அழைப்பு வர அவன் அவசரமாக கிளம்பினான். அன்று கோபுவும் வரவில்லை. நான் தனியாக அவள் என்னோடு, அவளிடம் பேசலாம் என்று தோணும் ஆனால் வார்த்தைகள் கிடைக்காது. அவளிடம் ஏதோ கூறிவிட்டு அப்படியே monitorஐ பார்த்துக் கொண்டிருந்தேன். "கதிர் என்ன அப்படி பாக்கற, பார்த்து monitor off ஆகிட போகுது" என நகைத்தாள். "கதிர், ஞாபகம் இருக்க போன வருஷம் 2nd year Intro அப்போ, நான் உன்கிட்ட ஏதோ சொன்னேன், நான் என்ன சொன்னேன்னு எனக்கே மறந்து போச்சு, அதுக்கப்பறமும் ஏன் என்கிட்டே பேசவே இல்ல, நான் எதாவது உன்கிட்ட பேசலாம்னு நினைப்பேன் ஆனா நீ எதாவது தப்பா எடுத்துக்க போறேன்னு கம்முனு இருந்துட்டேன்." என சொல்லி ஒரு படி மேலே போனால் என் மனதில். "சரி இப்போவாது எதாவது பேசு, சரியா... நீ என்ன ஒரே பையனா வீட்ல.." என்றவளுக்கு "இல்ல இல்ல.. நீ" என்று வழிந்தேன் வேறு என்ன கேட்பதன்று தெரியாமல் அவளைப் பற்றி கேட்டேன். "எனக்கு ஒரு அழகான செல்ல தம்பி இருக்கான், 8th படிக்கிறான்". உடனே நான் குறுக்கிட்டு "நீ கேரளானு எல்லோரும் சொன்னாங்க அப்பறம் எப்படி தமிழ் இவ்ளோ நல்லா பேசற" என்றேன். "நான் பொறந்தது வளர்ந்ததெல்லாம் இங்கதான் திருச்சில, அப்பாவுக்கு transfer ஆனதால நான் 5th படிக்கறப்போ அங்க போய் settle ஆகிட்டோம். 11th 12th Madrasla படிச்சேன், தாத்தா வீட்ல தங்கி, இப்போ மீண்டும் hostel இன்னொரு 4 வருஷம், உனக்கெல்லாம் jolly அப்பா அம்மானு எல்லோர் கூடவே எப்போதும்" அப்படியே அந்த lab முழுவதும் நிறைய விஷயங்கள் பகிர்ந்ததில் முடிந்தது.
அந்த நேரத்தில் உள்ளே வந்த கரன் என்னை பிரமிப்பாய் பார்த்து அவனிடத்தில் அமர்ந்தான். அந்த Lab முடிய "Bye கதிர், நாளைக்கு பார்க்கலாம் take care"என சொல்லிவிட்டு கிளம்ப, நானும் ஏதோ சிறியதாய் கை அசைத்தேன். "என்ன போகறப்ப மறக்காம bye லாம் சொல்லிட்டு போறாங்க, ஏன்டா ஒரு 2 மணி நேரம்தானே உன்கூட இல்ல அதுக்குள்ளே என்னடா இப்படி மாறிட்ட அதுவும் என்கூட இருந்துகிட்டு" என்று விளையாட்டாய் கேட்டான். நானும் அவள் கூறியதெல்லாம் கூறினேன். அவன் "இவள் இவ்ளோ நாள் அவ ஒரு ஒமனுக்குட்டினு தானே நினச்சேன், நம்ம தமிழ் தானா, சரிடா நீ நல்லா இருந்தா அது போதும்டா எங்களுக்கு" என கூறிக்கொண்டே நாங்கள் இருவரும் பேருந்தை நோக்கி போனோம். அன்று இரவு தூக்கத்தில் அவள் நம்மிடம் பேசியதெல்லாம் ஓடிக் கொண்டே இருந்தது, அதுவும் ஒரு பெண் நம்மை பற்றி விசாரிப்பதும் நெருக்கமாய் பேசுவதும் ஒரு புது அனுபவமாய் இருந்தது. அவளிடம் மீண்டும் மீண்டும் பேச வேண்டுமென மனம் துளிர்த்துக் கொண்டே இருந்தது. அதற்குப் பிறகு ஒவ்வொரு புதன் கிழமைக்காக காத்துக் கொண்டிருந்தேன் அந்த lab வருகைக்காக. ஒவ்வொரு lab லும் எங்கள் உரையாடல் நீண்டு கொண்டே இருந்தது. அன்று lab ல் ஏதோ பேசிக் கொண்டிருக்கையில் அவள் பிறந்த நாளைப் பற்றி விசாரித்தேன். அவள் " அது ஜூலை 18 போன வாரம்தான் போச்சு" எனக் கூற எனக்கு தெரிந்திருந்தால் எதாவது present பண்ணிருக்கலாமே என நினைக்கையில், Lecturer "ஏம்பா semester exam இன்னும் 3 மாசம்தான் இருக்கு நிறைய excercise incomplete இருக்கு so இந்த saturday special lab இருக்கு" னு சொல்லிவிட்டு கிளம்பினார். எனக்கோ உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு மூலையில் சந்தோசம் துள்ளி குதித்தது.

சரி அவளுக்கு present எதாவது கொடுத்தால் தப்பாக எடுத்துக் கொள்ள போகிறாள் என்று எதாவது sweet வாங்கலாம் என்று கடைக்கு போய் பார்த்தேன், அங்கே இருப்பதிலே பெரிய Card+Cadburys dairy milk வாங்கினேன். அதை bag ல் பத்திரமாக ஒழித்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினேன்.வழியில் கரனும் கோபுவும் "என்னடா மூட்டை இவ்ளோ பெருசா இருக்கு, இன்னிக்கு lab மட்டும்தானே" என்றனர். "இல்லடா சும்மா Lunch எடுத்து வந்தேன்" என தப்பித்தேன். அன்று lab ல் கொஞ்சம் பாடத்தில் மூழ்கியதால் அதை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தேன், மனதிலோ அதை எப்படி அவளிடம் கொடுப்பது என்று உள்ளுக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தேன். சட்டென்று lab முடிந்தவுடன் ஏதோ அவசரமாக வேலை இருக்கிறது என்று கிளம்பி அவள் hostel நோக்கி நடக்க ஆரம்பித்தாள். "இதோ இருங்கடா ஒரு நிமிஷத்துல வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு Bag உடன் அவள் பாதையை நோக்கி நடந்தேன்.

யாருமில்லா அந்த அமைதியான சாலையில் அவள் சென்று கொண்டிருக்க, பின்னால் சென்று மெல்ல லாவண்யா என்றேன். "என்ன கதிர் கிளம்பலையா" என்றாள். "என்ன இன்னிக்கு எதாவது வேலையா நீ மாட்டும் உடனே கிளம்பிட்ட" என்றேன். அவள் "இல்ல நீ உன் friends கூட ரொம்ப deep discuss பண்ணிட்டு இருக்கறப்போ disturb பண்ண வேணாம்னு உடனே கிளம்பிட்டேன்". "ஒ அப்படியா சரி நான் ஒரு gift கொடுத்தா தப்பா எடுத்துக்க மாட்டனு நினைக்கிறேன், உன்னோட birthday க்கு, அப்போ எனக்கு தெரியாது so" என சொல்லிக் கொண்டே Card+dairy milk எடுத்துக் கொடுத்தேன். அவள் எந்த தயக்கமுமில்லாமல் வாங்கிக் கொண்டு "ரொம்ப thanks கதிர்" என்று கூறி சிறிது நேரத்திற்குப் பிறகு hostel சென்றாள். அவள் செல்வதை கடைசி வரை பார்த்துவிட்டு திரும்புகையில், கரனும் கோபுவும் "என்னடா தனியா இங்க ஈ ஓட்டிகிட்டு இருக்க, அதுவும் அந்த குட்டி போகற வேலையில". "இல்லடா அந்த பொண்ணுக்கு போன வாரம் birthday வாம் அதான் ஒரு card கொஞ்சம் sweets வாங்கனேன் அத கொடுத்தேன்" என்று சொல்லி முடிப்பதற்குள் "டேய் நான் அப்பவே சொல்லல அத பார்த்த lunch bag மாதிரி தெரியல எதோ விஷயம் இருக்குன்னு நினச்சோம் சரி உன் கதை சேது மாதிரி ஆகாத இருந்த சரி தான்" என கூறினர். "இல்லடா அவன் என் friend அதான்" என இழுக்க. "டேய் நாங்களும் தான் வருஷம் வருஷம் birthday கொண்டாடறோம் ஒரு 25 காசு choclate கொடுத்திருப்பியா ஆனா அங்க Cadbury's அதுவும் extra large size ல, கோபு எனக்கென்னவோ பையன் நம்மள கூடிய சீக்கிரம் கழட்டி விட்டுடுவானு நினைக்கிறேன் நீ என்ன சொல்ற" என்றான் கரன்.

வகுப்பு வாசலில் நுழையும்போதே எனைப் பார்த்து ஒரு புன்னகையோடு போய் அமர்வாள். வகுப்புக்கு இடை இடையில் observation இடம் மாறுவதும் அவள் சந்தேகத்தை தீர்ப்பதும் என கொஞ்சம் நீண்டது இந்த பந்தம். இதற்கு பிறகு நாங்கள் பேசும் நேரமும் தன்னை நீட்டித்துக் கொண்டது. எதாவது ஒரு சிறிய சொல்லில் தொடங்கி ஒரு 100 பக்கம் தொடர்வதுபோல் உரையாடல் நீண்டது. "ஏன்டா அப்படி என்னடா பேசுவ அதுவும் வெட்டியா அந்த பொண்ணுகிட்ட" என கோபு கேட்டான். " டேய் நீ என்ன பண்ற அந்த இளவரசிக் கூட அதேதான் இவன் கொஞ்சம் விளக்கமா பேசி இருப்பான், உங்க ரெண்டு பேருகிட்டேயும் மாட்டிகிட்டு நான் நடுவுல தனியாதான் பேசனம்னு நினைக்கிறேன்" எனக் கரன் கூற அவன் பேச்சை மாற்றினான். 5 வது semester முடியும் நேரம் நாங்கள் Record, Mid semester, என கொஞ்சம் வேகமாய் பறந்தோம். தேர்வு அட்டவணையும் தயார் ஆக சற்று அதிலும் மூழ்கி இருந்தோம். அன்று கடைசித்தேர்வு நல்லபடியாக முடிந்தது அவள் என்னருகே வந்து "கதிர் நான் இன்னிக்கு ஊருக்கு கிளம்பறேன் semester leave முடிஞ்சுதான் வருவேன் ok வா, எங்க அப்பா அம்மா கூட ஜாலியா இருக்க போறேன்" என்று சொல்லிவிட்டு வேகமாய் பறந்தாள். அன்று கடைசி exam என்பதால் அனைவரும் ஒரு படத்தை முடித்துவிட்டு மாலை beach ல் பொழுதை கழித்தோம். எனக்கு எதோ ஒன்று நம்முடன் இல்லாதது போல் இருந்தது. "என்னடா அமைதியா இருக்க எதாவது தொன தொனனு பேசிட்டே இருப்பியே இப்போ என்ன கடல அமைதியா பார்த்திட்டு இருக்க" என கோபு கேட்டான்."அதெல்லாம் ஒண்ணுமில்லடா இன்னிக்கு கொஞ்சம் exam சரியா பண்ணல அதான்" என சொல்லி சமாளித்தேன். எனக்கு எப்படி இந்த ஒரு மாத காலத்தை கழிப்பது என்று தெரியாமல் இருந்தது. அந்த விடுமுறையில் எனக்கு என்னவோ மனதில் தோன்ற அன்று வலுக் கட்டாயமாக நான் இருவரையும் கல்லூரிக்கு அழைத்து சென்றேன். அங்கே நாங்கள் பேசிக் கொண்டிருந்த இடத்தை மட்டும் தனியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அங்கே போய் எதாவது கனவு காண்பேன் எதையோ நினைத்துக்கொண்டு, பின்பு இதுவே வாடிக்கையாகிவிட்டது.

நாட்கள் மெதுவாய் நகர 6 வது semester முதல் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.

(தொடரும்)....


என்றும் அன்புடன்
கருணா

சுவடுகள்-II


முதல் நாள் கல்லூரி... வரப்போகும் நான்கு வருட பாதையை இன்று முதல் தொடங்க போகிறேன்.
கல்லூரி வாசல் நுழையும்போதே ஒரு வித பயம் கலந்த பரவசம் மனதில், அன்று முதல் நாள் என்பதால் காலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அனைவரின் பெயர் வரிசை பார்த்து வகுப்பறைகள் பிரிக்கப் பட்டிருந்தது. அதனால் என் பள்ளி நண்பர்களெல்லாம் வேறு ஒரு பிரிவிற்கு நான் வேறு பிரிவிற்கு செல்ல வேண்டியதாயிற்று. என் பெயர் C section அட்டவணையில் ஒட்டியிருப்பதை பார்த்தேன். அதில் எனக்கு தெரிந்தவர்கள் எவருமில்லாமல் நீண்டு கொண்டே சென்றது. கடைசியில் என் வீட்டருகினில் இருக்கும் மற்றொரு நண்பன் பெயரும் இருந்தது. முதல் ஆண்டு எல்லோருக்கும் ஒரே பாடம் என்பதால் அனைத்து department மாணவர்களும் ஒன்றாகவே இருக்க வேண்டிய கட்டாயம். வகுப்பினில் காலடி எடுத்து வைக்கும்போது, எல்லோரும் போல அவ்வளவு சந்தோஷம் என் மனதில் இல்லை, நமக்கு இங்கே யாரையும் தெரியாது, முதல் பெஞ்சில் தெரியாத நண்பன் பக்கத்தில் நான் அமர்ந்தேன், ஆனால் அவன் என்னை சற்றும் கவனிக்காமல் அவன் பள்ளி தோழர்களிடம் மட்டுமே பேசி கொண்டிருந்தான். நான் மட்டும் தனிமையில் எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் அடர்ந்து பெய்து நிற்கும் மழை சத்தத்தை போல பேச்சு சத்தம் குறைந்து கொண்டே வந்தது, Physics Lecturer உள்ளே வருகிறார்.


அவர் தன்னைப்பற்றி அறிமுகம் செய்து முடித்துவிட்டு, எங்களை ஒருவர் ஒருவராக விசாரித்தார். 4 ஆம் மாணவன் நான். நடுக்கத்திலே எழுந்து "I am Kathiravan, from Paul's Hr sec school and my department is Civil Engineering" கொஞ்சம் அமைதியாக சொன்னேன்.இது அந்த பாழாய்ப்போன ஆசிரியருக்கு காதில் விழவில்லை, மீண்டும் சொல் என்றார். அதை மீண்டும் அப்படியே ஒப்பித்துவிட்டு அமர்ந்தேன். அந்த நேரத்தில் அப்படியே வரும் ஒவ்வொரு ஆசிரியர்கும் அதே வாய்ப்பாட்டை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதாயிற்று. யாரும் நம் அருகே ஒட்டி வருவதை போல் எனக்கு படவில்லை, நானாகவே சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். இப்படியே முதல் நாள் போனது... அன்று மாலை வீட்டுக்கு கிளம்பலாம் என்று வெளியே வரும்போது என் பள்ளி நண்பனின் அப்பா கார் கொண்டு வந்திருப்பதாக சொன்னான். "ஏய் கதிர் வா இதுலே போயிடலாம் வழியிலே drop பண்ணிறேன்" என்று கூற நானும் சென்றேன், உள்ளே என் section சேர்ந்த மற்றொரு நண்பனும் இருந்தான். என்னை பார்த்து "நீ C section தானே sorry பேரு மறந்துபோச்சு" நானும் கதிர் .. கதிரவன் என்றேன், அவனும் "என் பேரு கரண் நான் Mechanical... ". என்று சொன்ன வேளையில் நான் இறங்குமிடம் வந்ததால் வழியிலே இறங்கினேன். அடுத்து அதிக வார்த்தைகள் பறிமாறக் கொள்ள முடியவில்லை.

என்னோட முதல் Lab, அதுவும் அது Chemistry lab, எல்லோரையும் 2 நபர்களாக, பிரிய சொன்னார்கள். எல்லோரும் அவரவர் நண்பர்களாய் பார்த்து சேர, நான் தனியாக நின்றேன். நான் தனி ஆளாய் நிற்பதை பார்த்து கரண் "என்ன நீ தனியா நிக்கற, உனக்கு யார் batchmate" என்றான், நான் விழித்ததை பார்த்து "நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாமா "என்றான். நானும் தயக்கமில்லாமல் ஒட்டிக் கொண்டேன். அந்த Lab மட்டுமில்லாமல் Physics, Workshop என அனைத்து Lab நாங்கள் இருவரும் இணைந்தே செய்ய வாய்ப்பு கிடைத்தது. எதாவது கதை அடித்துக் கொண்டே எல்லா lab ம் சென்றது, எங்கள் இருவருக்குள் நட்பின் வேர் துளிர்க்க ஆரம்பித்தது. அவன் இருக்கும் காரணத்தால் நான் எந்த கவலையும் இல்லாமல் என் நாட்களை தள்ளி கொண்டிருந்தேன். அவன் ஆங்கிலம் ஆசிரியரையே அளரடிக்கும், அதை ஆவென்று பார்ப்பதே எங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது,ஆனால் அவன் நண்பர்களிடம் பேசும் விதம் அவ்வளவு அருமையாகவும், நகைச்சுவை உணர்வோடு இருக்கும். வாழ்நாள் முழுவதற்குமான நண்பன் எனக்கு கிடைத்து விட்டான் என்று அப்போதே தெரிந்து விட்டது.

ஒரு நாள் phusyics lab ல் நாங்கள் அரட்டையாக ஏதோ ஒரு experiment பண்ணிக் கொண்டிருக்கும் போது ஒரு பெண் " கதிரவன் உங்ககிட்ட calc இருக்கா" என்றால், யாருடா அது நம்ம பேர ஒரு பொண்ணு voice ல யாரோ கூப்பிடறாங்கனு பார்த்து "calc யா என தலை சொறிந்தேன்" எனக்கு அதற்கான அர்த்தம் புரியவில்லை, கரண் என் தலையிலே போட்டு "அதாண்டா இந்த calculator தான், அவங்க இப்படி சொல்றாங்க, கொடுடா வள்ளல் பிரபுவே" என்று நக்கலாக சொன்னான்."டேய் இங்க calc னு சொல்லுவாளுக, observation இத obsc னு எல்லாத்தையும் சுருக்கி சுருக்கி சொல்லுவாளுக இவளுக, ஆனா அவளுக பேச்ச மட்டும் சுருக்க மாட்டாளுக " என்று அந்த பெண் காதில் சத்தமாக விழும்படியே கூறினான். இதே மாதிரி பல இடத்தில் தலை சொரியவும் அவன் எனக்கு தெளிய வைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. நாட்கள் எல்லாம் வேகமாக கரைய ஆரம்பித்தன. ஒவ்வொரு நாட்களும், வாரமும்,மாதமும் கண்மூடி திறக்கும் வேளையில் முடிந்தது. 2 semester தேர்வும் முடிந்தது, முதலாண்டும் அதன் நாட்களை முடித்துக் கொண்டது.
2 ம் ஆண்டு வேறு இடம் வேறு நண்பர்கள், என்னுடனே இருந்த கரண் வேறு department ல் என யோசித்துக் கொண்டே சாலையில் நடந்து கொண்டிருந்த போது, கரண் வேகமாக ஓடிவந்து "மச்சான் ஒரு சந்தோசமான செய்தி group change list ஒட்டியிருக்காங்க பார்க்கலையா, உன்ன Mechanical department கு மாத்திட்டங்கடா" என்றான், "அடுத்த மூணு வருஷத்துக்கு நாம ரெண்டு பேரும் ஒன்னாத்தான் குப்பை கொட்டனும்" என நகைக்க, மனதில் மகிழ்ச்சி வெள்ளமோட, இருவரும் ஒன்றாக mechanical department போனோம். இங்கே இப்போது புது முகங்கள் புது நண்பர்கள் புது சுற்றம், இருந்தும் பல மாணவர்கள் ஏற்கனவே முதல் ஆண்டில் என்னோடு படித்தவர்களே. எந்த பயமும் இல்லாமல், சற்று அதிகமாகவே பேச ஆரம்பித்து விட்டேன். பொதுவாக Mechanical departmentl அதிகம் பெண்கள் இருக்க மாட்டார்கள், ஆனால் எங்கள் வகுப்பில் 18 பெண்கள், இது எண்ணிக்கையில் சற்று அதிகமே. என் பள்ளியிலே படித்த ஒரு பெண்ணும் இருந்தால்,ஆனால் என்னிடம் அதிகமாக பேசியதில்லை அவள். என் வீட்டருகே அவள் இருந்தாலும் கேட்ட கேள்விக்கு பதில் கூறும் அளவிற்கு இருந்தால் அவ்வளவுதான்.


அப்போது கரண் எனக்கு இன்னொரு நல்ல தோழனை அறிமுகம் செய்தான், கோபு, அவர்கள் இருவரும் ஒரே கல்லூரி பேருந்தில் பயணம் செய்ததில் தொடங்கிய அவர்கள் நட்பு, இருவர் கூட்டணி மூவராக மாறியது. கோபு பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டு பையன் ஆனால் இவன் பவ்யமாக இருந்தாலும், பரம கில்லாடி பெண்களை ஓட்டுவதிலும் தன் பின்னே ஓட வைப்பதிலும். ஆனால் நம்ம கரண் பெண்களிடம் எப்போது cut n right ஆக இருப்பதாலும், அடிக்கடி அவர்களின் மூக்கை உடைப்பதாலும் இவன் பக்கம் ஒரு பெண் தொடர்ந்து 5 நிமிடம் பேசினாலே அது நாங்கள் பெரிய சாதனையாக கருதினோம். எங்கள் மூவரின் நெருக்கமும் நாளுக்கு நாள் அதிகமானது, எந்த ஒளிவு மறைவில்லாமல் ஒவ்வொருக்கொருவர் நல்ல புரிதலுடன் நட்பு தொடர்ந்தது.

இவர்களின் நட்பு கிடைக்க ஏதோ ஒரு ஜென்மத்தில் புண்ணியம் சத்தியமாக செய்திருக்க வேண்டும் என எண்ணினேன்.
நான் யாரிடமும் அதிகம் பேசாமல் எனக்கென ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே என் முதல் வருடம் முழுவதியும் முடித்தேன். ஆனால் அதை தொடர என் மனம் விரும்பவில்லை, அதற்கான நல்ல சந்தர்பத்தை எதிர் பார்த்த சமயத்தில், அப்போது junior மாணவர்களுக்காக நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் என் வகுப்பு தோழர்கள்,seniors என அனைவரும் இருக்கும் கூட்டத்தில் முதன் முதாலாய் பேசினேன். senior கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சற்று நகைச்சுவையாகவும் கிண்டலுமாக பதில் சொன்னேன். அன்று நான் கலகலப்பாகப் பேசியதிலும், நகைச்சுவையாய் சில கவிதைகள் சொன்னதிலும் அனைவருக்கும் பிடித்தது. அந்த மேடையில் நிற்கும்போது நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அமைதியாக ஒரு புன்முறுவலோடு இதழ்களுக்கே வலிக்காமல் ஒருவள் சிரித்துக் கொண்டிருந்தால். லாவண்யா...என் வகுப்பு தோழி.. பேசும்போதே என் கண்கள் ஒரே திசையில் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது அவளை நோக்கி. இங்கு வந்த ஒரு மாதத்தில் மனதில் நின்றவள்.அந்த வரவேற்பு முடிந்த நேரம் அனைவரும் கலைந்து நேரம் லாவண்யா அருகே வந்து. "கதிர் நீ இப்படிலாம் கூட பேசுவியா? நீ சரியான உம்மனாமூஞ்சினுதானு நினச்சேன், உங்கிட்டேயிருந்து நான் இதெல்லாம் எதி பார்க்கவே இல்ல நல்லா பேசன keep it up " கூறிவிட்டு அடுத்த நொடியே மறைந்து ஓடினாள். எனக்கோ ஒன்றும் புரியவில்லை,எனக்கும் மீண்டும் மறு வார்த்தை கூற எதுவும் தோணவில்லை.. பல்லை இளிச்சிகிட்ட்டே ஒரு thanks சொன்னேன்.


அவள் வேறு யாரிடமும் பேசிகூட நான் கண்டதில்லை மனதில் ஓரமாக எங்கேயோ போய் ஏதோ ஒன்று ஒட்டிக் கொண்டது. நாட்களும் வேகமாக கரைந்தன. சற்றே என் நட்பு வட்டம் பெருகியது
செல்வகுமரன்,நந்தகோபால்,கார்த்திகேயன்,தட்சணாமூர்த்தி,ராஜாமணி,லக்ஷ்மிகாந்தன்,உதயா நீண்டு கொண்டே போச்சு. இவர்கள் இருக்கும்
இடத்தில் எங்கள் மூவரை கண்டிப்பாக பார்க்கலாம். அரட்டையுடன் சேர்ந்தே எப்போதும் ஆனந்தமாய் நாட்கள் ஓடின.
இளவரசி, இவள், கோபுவோட batch mate, அதனால் கோபு lab வகுப்புகளை எப்போதும் விரும்பி எதிர் பர்த்துகொண்டிருப்பான். அப்போதானே இருவரும் ஒன்றாக சேர்ந்து இருக்க முடியும். சில நேரங்களில் நாங்கள் எங்கே என்று தேட ஆரம்பித்தால் பையன் இளவரசியிடம் நாட்டு நடப்புகளை பேசி கொண்டிருப்பான் என்று நாங்களே புரிந்து கொள்வோம். எப்போதும் போல நாங்கள் 2 பேரும் lab ல் நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான், அவனாவது வாழட்டும்டா,என்று ஆசிர்வதித்து எங்கள் வேலையை பார்ப்போம்.
இரண்டாம் ஆண்டும் வேகமாக ஓடியது, ஓய்வில்லாமல். அவ்வப்போது எப்படியாவது நம்மிடம் முதலில் தானாக வந்து பேசிய லாவண்யாவிடம் ஒரு வார்த்தை பேச வேண்டுமென மனம் அலறிக் கொண்டே இருந்தது.அவளின் நட்பை நாட என் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவளை பற்றி என் பள்ளி தோழியிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அவள் கேரளாவை சேர்ந்தவள் என்று மட்டும்தான் எனக்கு அவளிடமிருந்து தெரிந்தது. எனக்கோ ஒரே குழப்பம் "நம்மகிட்ட அன்னிக்கு நல்லா தமிழ் பேசனாலே, அப்பறம் எப்படி" என்று மண்டையை எனக்குள்ளே பிய்த்துக் கொண்டேன்.


இதை என் நண்பர்களிடம் கேட்டால் என்னை ஒட்டியே தள்ளி விடுவார்கள். இப்போது இருக்கும் வரிசையின் படி நான்,கரண்,லாவண்யா... என தொடர்ந்தது.. நம்ம கோபுவோட வழிய follow பண்ணலாம்னு பார்த்தா Lab ல் நான்கு நான்கு பேராக பிரித்தால் அவள் வேறொரு batch போக வேண்டியதாயிற்று. ஒரு வார்த்தை பேச வாய்ப்பே இல்லாமல் போனது.. அப்படி ஒரு அமைதியையும் அடக்கத்தையும் தன்னுள்ளே வைத்திருந்தாள்.ஆனால் எங்கு பார்த்தாலும் அவள் உண்டு அவள் வேலை உண்டு இருப்பாள். யாரிடமும் வீண் பேச்சு பேசாமல் கல்லூரி முடிந்த பின் அடுத்த நொடியே ஹாஸ்டலுக்கு பறந்து செல்வாள். மீண்டும் செமஸ்டர் தேர்வு அது இது என்று மனம் ஒரிடமில்லாமல் சிதறியதால், அதற்குப் பிறகு எனக்கும் அவளைப் பற்றி துருவ மனம் போகவில்லை.
யோசிக்கவும் நேரமில்லை, என் பாதையில் நடக்க ஆரம்பித்தேன்.
இரண்டாம் வருடமும் தன் கணக்கை முடித்துக் கொண்டது. மூன்றாம் வருடம் ஆரம்பம். ஆரம்பமே நான் எதிர் பார்க்காதது எல்லாம் நடந்தது.


(தொடரும்)...

என்றும் அன்புடன்
கருணா

Monday, November 19, 2007

சுவடுகள்-I

காலத்தை பின்னோக்கி பார்ப்பதில் இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும் எளிதில் கிடைக்காது..
எத்தனை எத்தனை இன்ப நிகழ்வுகள்
இனிய நினைவுகள்
அழியா கனவுகள்
அழுத அனுபவங்கள்
வெற்றி, தோல்வி, சிரிப்பு, கண்ணீர்,
குதூகலம், கவலை, ஏறுமுகம், ஏமாற்றம்,
இன்பம், துன்பம்,..
இவையனைத்தும் கலந்துதான் வாழ்க்கை..
இதில் இவன் மட்டும் விதி விளக்கல்ல..
இதோ வாழ்க்கை போகும் பாதையில் பயணித்த என் நாயகனின் பயணச்சுவடுகளை இன்று முதல் தொடங்குகிறேன்…

அன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவரப்போகிறது.
காலை எழுந்த முதலே ஒரே பதற்றம் மட்டும்தான் என் நெஞ்சில் ஓடிக் கொண்டிருந்தது. அன்று என் நண்பர்களுடன் நானும் மதிப்பெண்ணை பார்க்க கல்வி அலுவலகத்திற்கு அனைவரும் மிதிவண்டியில் ஒரு கூட்டமாக சென்றோம். பாஸ் ஆகிவிடுவேன் ஆனால் மதிப்பெண் தானே முக்கியம். அதை தெரிந்து கொள்ளத்தான் அன்று சுமார் 1 மணி நேர காத்திருந்த பிறகு, அந்த அலுவலக ஊழியர் நாங்கள் எழுதிக் கொடுத்த எண்களுக்கு ஒருவர் பின் ஒருவராக மதிப்பெண்களை சொல்லி கொண்டிருந்தார். அதில் என் எண் மட்டும் வரவில்லை. அதற்குள்ளே அனைத்து நண்பர்களும் மகிழ்ச்சியை கொண்டாட ஆரம்பித்துவிட எனக்கோ மனதில் நடுக்கத்துடன் பயம் அதிகமானது.

அடுத்ததாக என் பெயர் வந்தது. "யாருப்பா இங்க கதிரவன்" என் கால்கள் விரைந்தன அவரை நோக்கி... என் மதிப்பெண்ணை பார்த்து என்னாலே என்னை நம்ப முடியவில்லை, 1138/1200 நண்பர்களை காட்டிலும் நான்தான் அதிக மதிப்பெண். சந்தோசத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டேன். வழியில் சைக்கிளில் வந்த என் அண்ணனிடம் சொல்லிவிட்டு,வீட்டில் என் அப்பாவிடம் சொன்னதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி.அவருக்கு அந்த மதிப்பெண்ணின் என் எதிர்காலத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். பள்ளியில் ஒட்டிய பலகையைப் போய் பார்த்தால் நான் பள்ளியிலே மூன்றாமிடம், யாரும் எதிர்பார்க்காத ஒன்று ஏனென்றால் சாதரணமாக படிக்கும் இவன் இந்த இடத்தை பிடிப்பான் என்று யாரும் எதிர் பாராதது. மறக்க முடியவில்லை அந்த ஒரு தினத்தை.

நான் இந்த ஆங்கிலம் மிரட்டும் பள்ளியில் சேர்ந்து +1 ல் நடந்த முதல் தேர்வில் எடுத்த மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு சற்று கூட அவ்வளவுதான். மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்கு பள்ளிக்கு என் அப்பாவோடு சென்று வாங்கிவிட்டு வரும் வேளையில் தலைமை ஆசிரியரை பார்க்க என் அப்பா விரும்பினார். எனக்கோ அவரிடம் செல்ல சற்றே தயக்கம், அவரிடம் எப்படி ஆங்கிலத்தில் பேசி சமாளிப்பது எப்படி என்று. என் சான்றிதழை அவரிடம் அப்பா கொடுத்து, "நீங்க +1 சீட் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்களே, இப்போ 3rd வந்திருக்கான்" என்று மிக்க ஆணவத்தோடு கூறினார். ஆம் நான் பத்தாம் வகுப்பு தமிழ் வழி படித்த ஒரே காரணத்துக்காக என்னை இந்த பள்ளியில் சேர்க்க முடியாது என்று அன்று அவர் சொன்னார், ஆனால் என் அப்பாவின் நண்பர் ஒருவர் சிபாரிசு செய்ததில் கிடைத்தது இந்த பள்ளியில் அனுமதி. ஆனால் அதை இப்போது நான் மறந்திருந்தாலும் என் அப்பா மறக்கவில்லை.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது, அடுத்த கட்டம் எல்லா மாணவர்கள் போல இன்ஜினியரிங் ஆசை என்னையும் விடவில்லை, 12 ஆம் வகுப்பு அரையாண்டு வரை அதை பற்றி ஒரு ஆர்வமில்லாமல் இருந்த எனக்கு என் அண்ணனின் வார்த்தைகள் என்னை அந்த படிப்பை திரும்பி பார்க்க வைத்தது. நுழைவுத்தேர்வில் எவ்வளவோ என்னை தயார் படுத்தியும் என்னால் அதிகமாக மதிப்பெண் பெற முடியவில்லை. +2 மதிப்பெண் இதனுடன் சேர்த்து பார்க்கும் பொழுது நம்பிக்கை கொஞ்சம் இருந்தது.
எத்தனை தனியார் கல்லூரிகள் இருந்தாலும் எனக்கோ அரசு பொறியியல் கல்லூரியில் சேர்வதில்தான் தனி ஆர்வம், ஏனென்றால் அங்குதான் கல்லூரியில் படித்தவுடனே அங்கேயே சுலபமாக வேலை கிடைத்து விடுமென்று அனைவரின் சொல் கேட்டதால். என் அப்பா தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் எடுக்கலாம் என்று எவ்வளவோ சொல்லியும் நான் அரசு கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் தேர்ந்தெடுத்தேன். எனக்கு அப்போது கிடைத்ததும் அதுதான். அந்த கல்லூரியில் முதல் ஆண்டு நன்றாக படித்தால் 2 ஆம் ஆண்டு நுழையும்போது நம் மதிப்பெண் ஏற்றாற்போல் நாம் கேட்கும் துறையை அவர்கள் தருவார்கள். அந்த நம்பிக்கையில் நானும் தயக்கமில்லாமல் சேர்ந்தேன்.

எனக்கு இங்கு படிப்பதில் கொஞ்சம் பெருமையாக இருந்தது, கூடவே என் பள்ளி நண்பர்களுக்கும் அதிலே நல்ல துறைகளில் இடம் கிடைத்தது. அவர்களும் மகிழ்ச்சியாக அவரவர் பாதையை அமைத்துக் கொண்டனர். அப்போது எங்கள் ஊரில் இன்ஜினியரிங் படித்தவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சம் குறைவுதான். எங்கள் வீட்டருகினில் இருக்கும் முருகன் அண்ணா, இவர் அங்கு படித்துவிட்டு நல்ல கம்பெனியில் வேலை செய்கிறார் என்று என் அண்ணனும் அப்பாவும் அடிக்கடி சொல்வார்கள். அவரை எனக்கு முன்னோடி என்று வைத்துக் கொண்டேன். பக்கத்து தெருவில் மற்றொருவர் அவ்வளவுதான் எனக்கு தெரிந்தது.

இதோ இப்போது நானும் அந்த எண்ணிக்கையில் ஒன்றை அதிகமாக்கினேன். வாழ்க்கையில் எவ்வளவோ கனவுகளுடன் அதை எப்படியும் சாதித்துவிட முடியும் என்ற சந்தோசத்தோடு ஆரம்பித்தேன் என் கல்லூரி வாழ்க்கையை....

முதல் நாள் கல்லூரி….

(தொடரும்.)


என்றும் அன்புடன்
கருணா

Wednesday, July 18, 2007

தபூசங்கரின் 'தேவதைகளின் தேவதை'


இந்த 'தேவதைகளின் தேவதை' ஆனந்தவிகடனில் வந்த
கவிதைகளின் தொகுப்பு...
அவற்றில் சிலவற்றை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு தாய் தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல் உன்னை எனக்குக் காட்டியது

எதற்காக நீ
கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம்
உட்கார்ந்திரு
போதும்!

நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தை எல்லாம்
இந்தப் பூமி மட்டுமே
தரிசிக்க முடிகிறது!
ஒரேயொரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்!
வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது வானம்!

முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப்

பார்த்து விட்டுத்
தவமிருக்கிறேன்.

கர்ப்பக் கிரகம்
தன்னைத் தானே
அபிஷேகம் செய்து கொள்ளுமா
என்ன?
நீ சொம்பில் நீரெடுத்துத்
தலையில் ஊற்றிக் குளித்ததைப்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான் கேட்டுக்
கொண்டிருக்கிறேன்
என்னை நானே!

நீ யாருக்கோ செய்த
மெளன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்செத்துவிடத் தோன்றியது.

நான் உன்னைக்
காதலிக்கிறேன்
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்து விடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது!


அன்புடன்
கருணா

Friday, July 13, 2007

நீ. நான்.. காதல்...


கனவுக்கும் கவிதைக்கும்
இடையில் சற்றே கண் மூடிய சமயத்தில்
கமுக்கமாய் பிறந்த காதலி நீ...

நீ உன் தாயின் வயிற்றில்
கருத்தரிக்கும் முன்னரே
என் காதல் உனக்காக கருவுற்றது...

கவிதை காதல்
காவியம் ஓவியம்
கலை சிற்பம்
இவையனைத்தும் தங்கும் ஓரிடம் நீ...

நீ எனை காணும் நாளெல்லாம்
எனக்கு கவிதை திருநாள்
காண மறக்கும் நாளெல்லாம்
காற்றில்லா வெறும் நான்...

விடுமுறை விரும்பாத
உன் வெட்கத்திடம் வீழ்ந்தது
என் காதல்...

அன்புடன்
கருணா

Thursday, March 15, 2007

ஞாநியின் எழுத்துப்பிழைகள்(1)

"மின்மினி பூச்சிகள்"

அவளைக் காணும் ஆசையில்
பூமிக்கு வந்து உருமாறி திரியும்
நட்சத்திர கூட்டங்கள்!...


"குற்றவாளி"

வனவிலங்குகள் வதைப்பு சட்டத்தின் கீழ்
குற்றவாளியாய் நான் இன்று!
உனக்கு அட்சதையாக்கி தூவ
சின்ன சின்ன பட்டாம்பூச்சிகளை
சேர்ப்பதாய் என் மீது வழக்கு!...

"விழி"

அன்பே என் கண்களை சற்று உற்று நோக்கு!
என் இதயத்தில் குடிகொண்டிருக்கும் நீ
எட்டிப்பார்ப்பது தெரியும்!...


"விடுகதை"

இரண்டு வானவில்
மத்தியில் சிகப்பு நிலா
இவையனைத்தும் ஒரு மூன்றாம் பிறையில்!
விடுகதை அல்ல!
அவளின் நெற்றியை சொன்னேன்!...

"மயிலிறகு"

உன் காதோரம் சுழன்றிருக்கும்
கார்குழலை சற்று இரவல் கொடு!
என் புத்தகத்தில் நான் பதுக்கி வைத்த
மயிலிறகை நேற்று முதல் காணவில்லை!...

"முத்துக்கள்"

அவளின் பல் வரிசைக்காக
பிரம்மன் எடுத்த முயற்சியில்
ஆழியில் வீசியெறியப்பட்ட எஞ்சிய கழிவுகள்!...


இவையனைத்தும் என் நண்பர் ஞாநியின் எழுத்துப்பிழைகள்
(படித்ததும் பிடித்தது)

பிழைகள் தொடரும்....

அன்புடன்
கருணா

Tuesday, March 13, 2007

காதல் கடல்




அன்புடன்
கருணா

Saturday, March 10, 2007

காதல் களம்


ஒவ்வொரு இரவும் என் கண்ணாடி முன்னே
நான் பழகி பார்க்கிறேன்
என் இதயத்தில் இருப்பதை
எப்படி சொல்வதென்று
ஒவ்வொரு காலையும்
மகிழ்ச்சி பொங்கியிருக்கும் என் இதயத்தோடு
போருக்கு என்னை ஆயத்தப்படுத்துகிறேன்...
என் போர்
"என் இனியவளுக்கு எப்படி என் காதலை சொல்வதென்று"
ஆனால் நீ என் முன்னெ வரும் நேரம்
வார்த்தைகள் தொலைந்து போகிறது!...
உன் முகத்தைப் பார்த்து
என் கண்கள் சிலையாகிறது!...
முகத்தை கண்ட பிறகு
எப்படி சொல்லாமல் இருப்பது சொல்...
இதோ சொல்லப்போகிறேன்
"நீதான் என் முழு உலகம்"
உன் புன்னகையில் என்னை மறந்தேன்
அதனால் மீண்டும் தோல்வியே!...
மனதினில் சுகமான, சுமையான ஏக்கங்கள்
சுமையானது
"மீண்டும் என் காதலை சொல்ல தோற்றுவிட்டேன்"
சுகமானது
"உன்போல் அழகான தேவதையிடம் தோற்றதினால்"
என் மனம் உடையவில்லை
வெற்றிபெறும் வரை போர் தொடுப்பேன்
தோல்வியில் வீழ்ந்திடமாட்டேன்
இனியவளே என்னை ஒருமுறை வெற்றிபெறவிடு,
அதன்பின் நீ சொன்னால் அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிடுவேன்....

"உன்னைத்தவிர"

அன்புடன்
கருணா

ஏற்றமும் இறக்கமும்...

ஏற்றம்.....

கவிதை எழுத பேனா தேவையில்லை
காதலியும் கற்பனையும் போதும்...

இரவும் நிலவும்
கடலும் அலையும்
கல்லும் கலையும்
காதலும் கற்பனையும்
பூக்களும் மென்மையும்
அடுத்தென்ன நீயும்
என் கவிதையும்தான்....

எல்லோரும் சொல்கிறார்கள் தூக்கத்தில்
நான் உளறுகிறேன் என்று அவர்களுக்கு
எப்படி தெரியும் தூக்கதிலும்
நான் உன்னை கவி பாடுகிறேன் என்று.....



......இறக்கம்

அவள் கப்பல்விட்டு விளையாடுகிறாள்
கடலில் இல்லை என் கண்ணீரில்....

என் இதயக்கண்ணாடியில்
உன் பிம்பத்தை பார் என்றேன்
கல்லெறிந்துவிட்டு சென்றாய்.......

நான் இறந்ததற்கு அவள் மெளன அஞ்சலி
செலுத்தினாள் ஆனால் அவளுக்கு தெரியாது
நான் இறந்ததற்கு அவள் மெளனம் தான் காரணம் என்று...

தொடரும்

அன்புடன்
கருணா

Thursday, March 08, 2007

என் கல்லூரியின் சிற்பங்கள்...



உங்களுக்காக புதுவை பொறியியல் கல்லூரியின் புகைப்படங்கள்......
மீண்டும் அழகிய நினைவுகளை திரும்பி பார்க்கிறேன்.
எத்தனை இனிமையான காலம் அது....
நினைத்தாலே மனதில் ஆராவாரம்...

நான்கு வருடங்களை நான்கு நிமிடங்களில் கழித்துவிட்டோம்.....

"காலை கண் விழிப்பதில் தாமதம்,
கொஞ்சம் உணவு,
பேருந்தில் பெண்கள்,
படிக்கட்டில் பயணம்,
அவ்வப்போது வருகைப்பதிவும் வகுப்பறையும்,
பகிர்ந்தே உணவுகள்,
பல காதல் முன்மொழிதல்,
கல்லூரி முடிந்தும் அரட்டைகள்,
மறந்துவிடும் பகைகள்,
எப்போதும் நண்பர்கள் கூட்டம்,
தேர்விற்கு முன் சின்ன சின்ன துண்டு சீட்டுகள்,
அதிக மதிப்பெண் எட்டாக்கனி,
தேர்வில் தோல்வி பெருமிதம்,
விடுமுறைக்கு பின் முதல் நாள்,
வகுப்பறையில் நாமில்லாமல் ஆசான்,
வெள்ளிதோறும் திரையரங்கம்,
கண்ணீருடன் பிரிவு உபச்சாரம்....


கல்லூரி வாழ்க்கை - சொர்க்கம்
இன்னும் தொடரும்
அன்புடன்
கருணா

இன்று தோண்டி எடுக்கப்பட்டவை...



கவிதையை ரசித்த
என்னுள் இருந்த கவிஞன்
இன்று எழுத தொடங்குகிறான்
சில படைப்புகள் நான் (சொந்தமாய்) கிறுக்கியவை......


"நானும் இன்று முதல் கவிஞன் ஆகிறேன்
உன் காதல் அரங்கேற்றத்தால்..."


"உன்னை எண்ணியே
என் காதல் கவிதையாகிறது....."


"என் இதய அறையில் முழு உலகம்
அது நீ....."


"பிரிவு என்பதன் பொருள்
உன்னை பிரிந்த பின்புதான் தெரிந்தது....."


"பிறவிபயன் அடைந்தேன்
ஆம் உன் காதல் பயன் அடைந்ததால்...."


"கனவுக்கும் கவிதைக்கும் இடையில் ஒரு வானவில்
என் வாழ்க்கையின் ஒரு வார்த்தை சொல்...."


"என் தோட்டத்தில் பூக்களை காணவில்லை...
யாவும் உன் வீட்டு வாசலில் வாசமிட்டிருக்கின்றன.....
உன் புன்னகையில் கண் விழிக்க....."


"கவிதையை மட்டும்தான் காதலிக்க நினைத்தேன்
ஆனால் காதலியே ஒரு கவிதையாக என்னிடம்....."


"யார் சொன்னது கனவுகள் பலிக்காதென்று....
இதோ என் காதல்(லி) ஒரு சாட்சி....."


"என் கவிதைகளுக்கு சொற்கள் வேண்டாம்
சொப்பனம் போதும்....."


"அழுதுகொண்டிருப்பேன் என்கிறாய் நான் வந்து அணைக்கும் வரை...
உன்னை அணைப்பதா !!!
அள்ளி கொஞ்சுவதா !!!"


"உனக்கும் எனக்கும் நடக்கும் சண்டையில் நீ வென்றுவிடுகிறாய்
உன் அரை நொடி முத்தத்தால்....."


"காதலி முத்தம்,
அடுத்த தழுவல்,
கண்ணில் தூண்டில்,
சேர்ந்தே உதடுகள்,
செலவாகும் முத்தங்கள்,
காலையில் அவள் முகம்,
கவிதையில் அவள் பெயர்......
யோசிக்கும் வேளையில்
கலைந்தது கனவு"



இவையாவும் இன்று தோண்டி எடுக்கப்பட்டவை...
இன்னும் தொடரும்
உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்


அன்புடன்
கருணா

Wednesday, March 07, 2007

கருவறையில் தொடங்கியது ...



(படக்கவிதை படித்ததில் பிடித்தது)
"அம்மா என்றொரு தெய்வம் என் முன்னே தினமும்....
தொழுவாமல் இருக்காது மனமும்..."

அன்புடன்
கருணா

இதோ என் முதல் பதிவு...


இதோ என் முதல் பதிவு.....

இன்று முதல் நானும் எழுத தொடங்கிவிட்டேன்...
என்னையும் ஏற்று கொள்ளுங்கள்...
உங்கள் கற்பனைகளை கவிதைகளுடன் நான் சொல்வேன்.....


நன்றியுடன்
கருணா