Monday, November 19, 2007

சுவடுகள்-I

காலத்தை பின்னோக்கி பார்ப்பதில் இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும் எளிதில் கிடைக்காது..
எத்தனை எத்தனை இன்ப நிகழ்வுகள்
இனிய நினைவுகள்
அழியா கனவுகள்
அழுத அனுபவங்கள்
வெற்றி, தோல்வி, சிரிப்பு, கண்ணீர்,
குதூகலம், கவலை, ஏறுமுகம், ஏமாற்றம்,
இன்பம், துன்பம்,..
இவையனைத்தும் கலந்துதான் வாழ்க்கை..
இதில் இவன் மட்டும் விதி விளக்கல்ல..
இதோ வாழ்க்கை போகும் பாதையில் பயணித்த என் நாயகனின் பயணச்சுவடுகளை இன்று முதல் தொடங்குகிறேன்…

அன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவரப்போகிறது.
காலை எழுந்த முதலே ஒரே பதற்றம் மட்டும்தான் என் நெஞ்சில் ஓடிக் கொண்டிருந்தது. அன்று என் நண்பர்களுடன் நானும் மதிப்பெண்ணை பார்க்க கல்வி அலுவலகத்திற்கு அனைவரும் மிதிவண்டியில் ஒரு கூட்டமாக சென்றோம். பாஸ் ஆகிவிடுவேன் ஆனால் மதிப்பெண் தானே முக்கியம். அதை தெரிந்து கொள்ளத்தான் அன்று சுமார் 1 மணி நேர காத்திருந்த பிறகு, அந்த அலுவலக ஊழியர் நாங்கள் எழுதிக் கொடுத்த எண்களுக்கு ஒருவர் பின் ஒருவராக மதிப்பெண்களை சொல்லி கொண்டிருந்தார். அதில் என் எண் மட்டும் வரவில்லை. அதற்குள்ளே அனைத்து நண்பர்களும் மகிழ்ச்சியை கொண்டாட ஆரம்பித்துவிட எனக்கோ மனதில் நடுக்கத்துடன் பயம் அதிகமானது.

அடுத்ததாக என் பெயர் வந்தது. "யாருப்பா இங்க கதிரவன்" என் கால்கள் விரைந்தன அவரை நோக்கி... என் மதிப்பெண்ணை பார்த்து என்னாலே என்னை நம்ப முடியவில்லை, 1138/1200 நண்பர்களை காட்டிலும் நான்தான் அதிக மதிப்பெண். சந்தோசத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டேன். வழியில் சைக்கிளில் வந்த என் அண்ணனிடம் சொல்லிவிட்டு,வீட்டில் என் அப்பாவிடம் சொன்னதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி.அவருக்கு அந்த மதிப்பெண்ணின் என் எதிர்காலத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். பள்ளியில் ஒட்டிய பலகையைப் போய் பார்த்தால் நான் பள்ளியிலே மூன்றாமிடம், யாரும் எதிர்பார்க்காத ஒன்று ஏனென்றால் சாதரணமாக படிக்கும் இவன் இந்த இடத்தை பிடிப்பான் என்று யாரும் எதிர் பாராதது. மறக்க முடியவில்லை அந்த ஒரு தினத்தை.

நான் இந்த ஆங்கிலம் மிரட்டும் பள்ளியில் சேர்ந்து +1 ல் நடந்த முதல் தேர்வில் எடுத்த மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு சற்று கூட அவ்வளவுதான். மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்கு பள்ளிக்கு என் அப்பாவோடு சென்று வாங்கிவிட்டு வரும் வேளையில் தலைமை ஆசிரியரை பார்க்க என் அப்பா விரும்பினார். எனக்கோ அவரிடம் செல்ல சற்றே தயக்கம், அவரிடம் எப்படி ஆங்கிலத்தில் பேசி சமாளிப்பது எப்படி என்று. என் சான்றிதழை அவரிடம் அப்பா கொடுத்து, "நீங்க +1 சீட் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்களே, இப்போ 3rd வந்திருக்கான்" என்று மிக்க ஆணவத்தோடு கூறினார். ஆம் நான் பத்தாம் வகுப்பு தமிழ் வழி படித்த ஒரே காரணத்துக்காக என்னை இந்த பள்ளியில் சேர்க்க முடியாது என்று அன்று அவர் சொன்னார், ஆனால் என் அப்பாவின் நண்பர் ஒருவர் சிபாரிசு செய்ததில் கிடைத்தது இந்த பள்ளியில் அனுமதி. ஆனால் அதை இப்போது நான் மறந்திருந்தாலும் என் அப்பா மறக்கவில்லை.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது, அடுத்த கட்டம் எல்லா மாணவர்கள் போல இன்ஜினியரிங் ஆசை என்னையும் விடவில்லை, 12 ஆம் வகுப்பு அரையாண்டு வரை அதை பற்றி ஒரு ஆர்வமில்லாமல் இருந்த எனக்கு என் அண்ணனின் வார்த்தைகள் என்னை அந்த படிப்பை திரும்பி பார்க்க வைத்தது. நுழைவுத்தேர்வில் எவ்வளவோ என்னை தயார் படுத்தியும் என்னால் அதிகமாக மதிப்பெண் பெற முடியவில்லை. +2 மதிப்பெண் இதனுடன் சேர்த்து பார்க்கும் பொழுது நம்பிக்கை கொஞ்சம் இருந்தது.
எத்தனை தனியார் கல்லூரிகள் இருந்தாலும் எனக்கோ அரசு பொறியியல் கல்லூரியில் சேர்வதில்தான் தனி ஆர்வம், ஏனென்றால் அங்குதான் கல்லூரியில் படித்தவுடனே அங்கேயே சுலபமாக வேலை கிடைத்து விடுமென்று அனைவரின் சொல் கேட்டதால். என் அப்பா தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் எடுக்கலாம் என்று எவ்வளவோ சொல்லியும் நான் அரசு கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் தேர்ந்தெடுத்தேன். எனக்கு அப்போது கிடைத்ததும் அதுதான். அந்த கல்லூரியில் முதல் ஆண்டு நன்றாக படித்தால் 2 ஆம் ஆண்டு நுழையும்போது நம் மதிப்பெண் ஏற்றாற்போல் நாம் கேட்கும் துறையை அவர்கள் தருவார்கள். அந்த நம்பிக்கையில் நானும் தயக்கமில்லாமல் சேர்ந்தேன்.

எனக்கு இங்கு படிப்பதில் கொஞ்சம் பெருமையாக இருந்தது, கூடவே என் பள்ளி நண்பர்களுக்கும் அதிலே நல்ல துறைகளில் இடம் கிடைத்தது. அவர்களும் மகிழ்ச்சியாக அவரவர் பாதையை அமைத்துக் கொண்டனர். அப்போது எங்கள் ஊரில் இன்ஜினியரிங் படித்தவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சம் குறைவுதான். எங்கள் வீட்டருகினில் இருக்கும் முருகன் அண்ணா, இவர் அங்கு படித்துவிட்டு நல்ல கம்பெனியில் வேலை செய்கிறார் என்று என் அண்ணனும் அப்பாவும் அடிக்கடி சொல்வார்கள். அவரை எனக்கு முன்னோடி என்று வைத்துக் கொண்டேன். பக்கத்து தெருவில் மற்றொருவர் அவ்வளவுதான் எனக்கு தெரிந்தது.

இதோ இப்போது நானும் அந்த எண்ணிக்கையில் ஒன்றை அதிகமாக்கினேன். வாழ்க்கையில் எவ்வளவோ கனவுகளுடன் அதை எப்படியும் சாதித்துவிட முடியும் என்ற சந்தோசத்தோடு ஆரம்பித்தேன் என் கல்லூரி வாழ்க்கையை....

முதல் நாள் கல்லூரி….

(தொடரும்.)


என்றும் அன்புடன்
கருணா