Wednesday, February 06, 2008

சுவடுகள்-V



தேர்வுகள் முடிந்த நேரம், மனதில் எந்த கவலையும் இல்லாமல் அரட்டையோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம்.
எப்போது இறுதி வருட வகுப்பில் காலடி வைப்போம் என்ற கனவுடனே நாட்கள் ஓடியது. மூன்றாமாண்டு முடிந்த நேரமே அனைவரும் CampusI Interview, இதற்கு தங்களை தயார் படுத்திக்கொண்டார்கள். பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல, நானும் கரண் உடன் சேர்ந்து அதற்காக ஏதோ படிக்க ஆரம்பித்தேன். எனக்கும் எப்படியாவது கல்லூரி முடியும் முன்னரே ஒரு வேலை வாங்கி விட வேண்டும் என்ற கனவு மட்டும் கண்களில் தவழ்ந்து கொண்டே இருந்தது. இவையெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, எதை பற்றியும் கவலைப்படாதா ஒரு கூட்டமும் ஒன்று உண்டு. சந்தோஷ்தான் இதன் தலைவன். இவன் படிப்பில் கொஞ்சம் கெட்டிக்காரன்.அந்த கூட்டத்திற்கு வேண்டுமானால் எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் சந்தோஷின் நிலை அவனுக்கு தெரியும்.


ஆனால் அவன் எப்போதும் எங்கள் வகுப்பின் மீது ஒரு வெறுப்பாகவே இருப்பான், அதன் காரணம் என்னவென்று எங்களுக்கு கேட்க விருப்பமில்லை. எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது பிடிக்கும், ஆனால் எல்லோரிடமும் அதுமாதிரி இருக்க விரும்பமாட்டான். எங்களிடம் கொஞ்சம் உரிமை அதிகமாக எடுத்துக்கொண்டே பேசுவான் எந்த பாரபட்சமும் இல்லாமல். அவனக்கு எங்கள் வகுப்பு மீது இருக்கும் கோபம் என்னவென்று தெரியும், காரணம் அவன் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்பில் நடந்த CR தேர்வில், ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில் நின்ற அவனால் வெற்றி பெற முடியவில்லை, இரண்டு முறையும் அவன் பெற்றது சில வாக்குகளே. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம், அவன் ஒட்டி ஒட்டாமல் மற்ற நண்பர்களோடு இருப்பதற்கு. எங்களைப் பொருத்தவரை எந்த பாகுபாடில்லாமல் நாங்கள் அவனுடன் பழகுவோம் அவனும் அதுமாதிரிதான். நான் லாவண்யாவின் நண்பன் என்ற ஒரு காரணமும் அதன்பின்னே இருக்கலாம். கடைசி ஆண்டு கல்லூரி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் எங்கள் கல்லூரிக்கு TVS Motors நிறுவனம் campus Interview வந்தது. எங்கள் வகுப்பில் படிக்கும் அனைவருக்கும் அது கனவு Company. அந்த company க்கு கரணை விட வேற ஒரு ஆள் எப்படியும் select ஆகமாட்டார்கள் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு இருந்தது. அன்று நடந்த எழுத்துத் தேர்விலேயே எங்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டார்கள். அன்று பெரியதாக ஒரு மனக்கஷ்டம் இல்லை, காரணம் கரண் கடைசிவரை சென்றிருந்தான்,அவனுடன் நம்ம சந்தோசும்.


Technical, HR என அனைத்து interview முடிந்து கரணும்,சந்தோசும் இறுதி முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அன்று இரவு ஒரு 10 மணி அளவில் முடிவை சொன்னார்கள், எங்களின் எதிர்பார்ப்பை போலவே கரண் பெயரை சொன்னார்கள். அவனுக்கு மகிழ்ச்சி மனதில் பெருக்கெடுத்து ஓடியது எங்களுக்கும்தான். நாங்கள் அன்று இரவே அதை ஒரு பெரிய விழாவாக கொண்டாடிவிட்டோம். சந்தோஷ் வேகமாக வந்து கரணுக்கு கை குலுக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

கல்லூரியும் தொடங்கியாயிற்று.
முதல்நாள் முதல் பாடவேளையே ஒரே அறிவுரையாக சென்றது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நாங்கள் எல்லாம் எப்போது போலவே Interval க்கும் Lunch க்கும் காத்துக் கொண்டிருந்தோம். முதல்நாள் முடியும் வேளையில் மீண்டும் CR election. கரண் என்னிடம் " டேய் கதிர் இந்த election ல நாம மூணு பேர்ல ஒருத்தன் நிக்கறோம், யார் நின்னாலும் நமக்குத்தான் இந்த CR Post. இதுவரைக்கும் நின்னவங்க ஒண்ணும் பெருசா பண்ணல so நாம உருப்படியா எதாவது நம்ம class க்கு செய்யணும் OK வா" என்றான். வகுப்பில் எங்களுக்கு எப்போதும் ஆதரவு இருக்கும் என்று தெரியும், அந்த நம்பிக்கையில்தான் கரண் கூறினான். நாங்கள கரணை முன்மொழிய, அவனுக்கு எதிராய் மீண்டும் சந்தோஷ். "டேய் என்னடா இவன் நம்மகிட்ட ஒழுங்கா பேசறான் ஆனா எதுக்கு இந்த வீனத்த வேலை சொல்லு, கம்முனு வந்தமா ஒரு பொண்ணு pickup ஆச்சு.. போனமா இல்லாம தலய எதிர்த்து ஏன் இந்த election ல அவன்" என கூறினான் கோபு. தேர்தலின் முடிவில் மீண்டும் அவனுக்கு கிடைத்த வாக்குகள் எண்ணிக்கை 7. மிச்சமிருந்த 53 வாக்குகளும் கரணுக்கு விழ அவனுக்கு இன்னும் கொஞ்சம் வெறுப்பு அதிகமானது எங்கள் வகுப்பின் மீது. "டேய் அவன் எவ்ளோ சொல்லியும் கேக்கல நிக்காதனு சொல்லியும் நின்னான் அப்பறம் இந்த அசிங்கமெல்லாம் தேவையா சொல்லு" என செல்வா கூற "டேய் என்னடா இப்படி சொல்ற அவன் பங்காளி பக்கத்துலே இருக்கான், அவன் முன்னாடியே இப்படி சொல்றியே கோச்சிக்க போறான் இவன் " என என்னை நோக்கி வெறுப்பேற்றினான் கோபு.


மறுநாள் லாவண்யா என்னிடம் ஏதாவது பேசுவாள் என்று நினைத்தேன். ஆனால் அப்படி ஒன்றும் நடக்காத காரணத்தால், நானே போய் ஆரம்பித்தேன். "என்ன madam ரொம்ப busy போல, நேத்து கண்லே படல, எங்க போய்டீங்க" எனக் கேட்டேன். லாவண்யா "இல்ல நேத்து கொஞ்சம் தலவலி அதான் hostel போய்ட்டேன்" என்றாள். காரணம் எனக்கு விளங்கியது, அதை எனக்குள்ளே வைத்துக்கொண்டு, ஏதும் தெரியாதது போல், "ஏன் என்ன ஆச்சு இருக்கறப்பவே" எனக் கேட்க, "சந்தோஷ்கிட்ட நான் இந்த CR election ல நிக்க வேணாம்னு எவ்ளோவோ சொன்னேன் கதிர் ஆனா, என் பேச்ச கேட்காம போய் அவன் நின்னான்" என்றாள். "சரி நீ ஏன் அவன்கிட்ட போய் சொல்ற, அப்படி என்ன உங்க 2 பேருக்குல்லேயும்" என்று கேட்டேன். அதற்கு லாவண்யா "எல்லாம் தெரிஞ்சிகிட்டே நடிக்காத கதிர் உனக்கு எதுவும் தெரியாதா" என சற்று கோபமாக கூறினாள். எனக்கும் கொஞ்சம் தைரியம் வந்து "எனக்கு என்ன தெரியும் சொல்லு. நீ ஏதாவது என்கிட்டே சொன்னியா சொல்லு. அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்குல்லேயும், நீயே சொல்லதப்போ நான் என்னனு எடுத்துகறது" எனக் கேட்டேன். அவளோ "ஏன் கதிர் எதுவும் தெரியாது போல நடிக்கற, அவன நான் Love பண்றது உனக்கு தெரியுமில்ல அப்பறம் என்ன" என அதை முதன் முதாலாக என்னிடம் கூறினாள். ஏனென்று தெரியவில்லை அவள் வாயாலே அதைக் கேட்டது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் அதை நான் எதிர்பார்த்ததுதான். நான் தோழி என்ற நோக்கத்தில் பார்த்தாலும் அடுத்தவன் காதலி என அவளே கூறும்போது சற்று இறுக்கமாகத்தான் இருந்தது மனதில். அதற்கு மேல் அவள் வார்த்தைகளை கேட்க எனக்கு பொறுமையில்லாத காரணத்தால், இதற்குப் பிறகும் இதைப்பற்றி நான் அவளிடம் விசாரித்தால், அது இந்த நட்பின் விரிசலுக்கு காரணம் ஆகிவிடுமோ என்று நினைத்துக்கொண்டு வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அப்படியே அங்கிருந்து வந்து விட்டேன்.


"என்னடா நேத்து எதோ ஒரு பெரிய discussion போல, madam அப்பறம் நீங்க எதோ ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தீங்க, நாங்களும் எவ்ளோ நேரம்தாண்டா உனக்கு wait பண்றது சொல்லு, எதோ important discussion நினைச்சோம். அதான் சொல்லிக்காம கிளம்பிட்டோம், " என்றான் கரண். "இல்லடா நேத்து அவ சந்தோஷ பத்தி கொஞ்சம் சொன்னா அதான்" என்றேன். "ஆமா உனக்கு ஒண்ணும் தெரியாது அவங்க எல்லாத்தியும் சொன்னாங்க போடாங்க, நீயும் உன் கதையும்" என்றான் கோபு. அதற்குப்பிறகும் நான் எப்போதும் போலத்தான் அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்.


ஒரு வாரம் கழித்து அனைவரும் Project முடிவு செய்வதற்கு busy ஆனார்கள். அவரவர் அவர்களின் project ல் ஆட்களை தாங்களாக பிரித்துக் கொண்டார்கள். எங்கள் மூவரை யாரும் வந்து அழைக்கவில்லை அவர்களின் project க்கு, ஏனெனில் எல்லோருக்கும் தெரியும் இந்த மூவர் கூட்டத்தை பிரிக்க முடியாது என்று. இந்த மூவரோடு சேர்த்து நான்கவதாக ஒரு ஆளை சேர்த்துக் கொள்ளலாம் என்று கரண் மற்றும் கோபுவிடம் யோசனை கூறினேன் நான். அவர்களுக்கு அதன் காரணம் தெரிந்துவிட்டது. "டேய் நீயெல்லாம் திருந்தவே மாட்டியாடா, உன்னையெல்லாம் இன்னும் ஒரு 100 கரண் வந்தாலும் திருத்த முடியாதுடா" என நகைத்தான் கோபு. "நீ எதுக்கு கேட்கறனு தெரியும், ஏன் அந்த அக்காவ நம்ம project ல சேர்த்துக்கணும் அதானே" எனக் கூறினான் கரண். "டேய் இவனோட plan எனக்கு தெரிஞ்சு போச்சுடா, நாம 4 பேர் சேர்ந்தா வச்சிக்கோ, இவங்க ரெண்டு பெரும் வேற project பண்ணுவாங்க, நாம ரெண்டு பேர் மட்டும்தாண்டா உண்மையான project பண்ணனும், கோபு இவன நம்பாத" என கரண் முடித்தான்.

நான் குறுக்கிட்டு"டேய் அந்த பொண்ணு என்கிட்டே கேட்டுச்சுடா அத உங்ககிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன், ஆனா நாம 4 பேரும் சேர்ந்து செஞ்சா நல்ல இருக்கும்னு எனக்கு தோனுதுடா", " யாருக்கு உனக்கு நல்லா இருக்கும்டா, ஆனா எங்க நிலமைய கொஞ்சமாவது யோசிச்சியா சொல்லு, கரண் இவன் நம்மள இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு பாதுகாப்பான படைவீரர்களா மாத்த பார்க்கிறான் இவன நம்பாத" என கூறினான் கோபு. இவ்வளவு நடந்தும் எனக்கோ மனதில் அவள் மேல் இருந்த மரியாதை சற்றும் குறையவில்லை. இதை புரிந்து கொண்ட அவர்கள் என் பொறுமையை சோதித்துப் பார்க்க விளையாட்டுக்கு என்னிடம் "சரிடா இப்போ உனக்கும் எங்களுக்கும் Toss போடலாம், பூ விழுந்தா அவள நாம சேர்த்துக்கலாம், அப்படி தல விழுந்தா தல சொல்றததான் நீ கேட்கணும் சரியா" என்றான் கோபு. நானும் அதிர்ஷ்டத்தை என் பக்கம் வைத்துக் கொண்டு தலை ஆட்டினேன். அந்த பாழாய்ப்போன 1 ரூபாய் தலையை காட்டியது. உடனே நான் குறுக்கிட்டு "டேய் மொத்தம் 3 தடவ போட்டு பார்க்கலாம், இப்போ 1 over so அடுத்த ரெண்டு முறை coin twist பண்ணுவோம், so அதுல என்ன விழுதோ அது படி நடக்கலாம் ஓகேவா" என்றதும் இருவரும் என்னை ஒரு கேவலமான வார்த்தையில் திட்டிவிட்டு மீண்டும் toss போட்டார்கள். மூன்று முறையும் தலையே விழ எனக்கு அதன் பிறகு ஒன்றும் என்னால் பேசமுடியவில்லை. ஆனால் என் மனதை புரிந்து கொண்ட கோபுவும் கரணும் "சரிடா இதெல்லாம் விடுடா நாம 4 பேரும் செய்யலாம், என்ன பண்றது உன்கூட இருக்கறதால இதெல்லாம் எங்களுக்கு தேவைதாண்டா..எல்லாம் உனக்காக" என்றான் கரண்.

4 பேர் என்று முடிவு செய்துவிட்டு எங்கள் project guide அவரை போய் சந்தித்த போது அவர் ஒரு பெரிய குண்டை தலையில் போட்டார். "Sir நாங்க 4 பேர் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம்" என்றான் கரண். உடனே அவர் " இங்க பாருங்கப்பா இந்த வருசதுலேர்ந்து 3 பேருதான் ஒரு project க்கு HOD சொல்லிட்டார் so நீங்க decide பண்ணி சொல்லுங்க" எனக் கூறிவிட்டார். "சரிடா நீங்க 3 பேர் செய்ங்க நான் வேணும்னா செல்வா கூட பண்றேன்" எனக் கூறினான் கோபு, உடனே நான் குறுக்கிட்டு "டேய் நாம 3 பேர்தாண்டா செய்றோம் அவ்ளோதான் நான் அவகிட்ட ஏதாவது சொல்லிடறேன்" என்றேன்.எனக்கு அப்போது அவள் முக்கியமாக தெரியவில்லை ஆனால் அவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்றுதான் யோசித்தேன்.


இதை எப்படி அவளிடம் போய் சொல்வதென்று தெரியாமல் அவளை அன்று தேடிக் கொண்டிருந்தேன். அனைத்து இடத்திலும் தேடிவிட்டு கடைசியாக பேருந்துக்கு செல்லலாம் என தொடர்ந்த போது லாவண்யா சந்தொஷுடன் வேகமாக வந்து கொண்டிருந்தாள். நான் அவளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று முன்பே தெரிந்ததுபோல் சந்தோஷ் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். "லாவண்யா... வந்து உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல" என நான் இழுக்கும்போது, அவள் மிகவும் தயக்கமாக "கதிர்.. .நானும் உன்கிட்ட ஒன்னு சொல்லணும், நான் உன்கூட project பண்றேன்னு சொன்னேன்ல ஆனா இப்போ நான் சந்தோஷ்கூட பண்ணலாம்னு இருக்கேன் நீ எதுவும் தப்பா எடுத்துக்காத சரியா.. என் நிலைமை அப்படி. இப்போ எங்களுக்கு ஒரு நல்ல company ல project கிடைச்சிருக்கு அங்கே பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. அங்கதான் போய்ட்டு வரேன்" என அடுக்கிக்கொண்டே போனாள். என்னிடம் பேசிக்கொண்டே இருக்கும்போது அவனிடமிருந்து எதோ கண்ணால் சைகை வர "நாளைக்கு பார்க்கலாம் கதிர்" என வேகமாக நகர்ந்தாள், அவளுக்காக wait பண்ணும் சந்தோஷ் திசை நோக்கி.


எனக்கோ என்னடா இவள புரிஞ்சிக்கவே முடியலையே என உள்ளுக்குள்ளே நினைத்துக் கொண்டு ஒரு பெரு மூச்சோடு அங்கிருந்து நகர்ந்தேன். என்னோட நிலையையும் நான் மெல்ல உணர ஆரம்பித்தேன். அன்று மாலை பேருந்தில் நாங்கள் எப்போது பயணிக்கும் கடைசி இருக்கையில் தலை கவிழ்த்த என் மனதில் பல குழப்பங்கள் அரங்கேறத் தொடங்கியது.

(தொடரும்)

அன்புடன்
கருணா