Monday, November 19, 2007

சுவடுகள்-I

காலத்தை பின்னோக்கி பார்ப்பதில் இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும் எளிதில் கிடைக்காது..
எத்தனை எத்தனை இன்ப நிகழ்வுகள்
இனிய நினைவுகள்
அழியா கனவுகள்
அழுத அனுபவங்கள்
வெற்றி, தோல்வி, சிரிப்பு, கண்ணீர்,
குதூகலம், கவலை, ஏறுமுகம், ஏமாற்றம்,
இன்பம், துன்பம்,..
இவையனைத்தும் கலந்துதான் வாழ்க்கை..
இதில் இவன் மட்டும் விதி விளக்கல்ல..
இதோ வாழ்க்கை போகும் பாதையில் பயணித்த என் நாயகனின் பயணச்சுவடுகளை இன்று முதல் தொடங்குகிறேன்…

அன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவரப்போகிறது.
காலை எழுந்த முதலே ஒரே பதற்றம் மட்டும்தான் என் நெஞ்சில் ஓடிக் கொண்டிருந்தது. அன்று என் நண்பர்களுடன் நானும் மதிப்பெண்ணை பார்க்க கல்வி அலுவலகத்திற்கு அனைவரும் மிதிவண்டியில் ஒரு கூட்டமாக சென்றோம். பாஸ் ஆகிவிடுவேன் ஆனால் மதிப்பெண் தானே முக்கியம். அதை தெரிந்து கொள்ளத்தான் அன்று சுமார் 1 மணி நேர காத்திருந்த பிறகு, அந்த அலுவலக ஊழியர் நாங்கள் எழுதிக் கொடுத்த எண்களுக்கு ஒருவர் பின் ஒருவராக மதிப்பெண்களை சொல்லி கொண்டிருந்தார். அதில் என் எண் மட்டும் வரவில்லை. அதற்குள்ளே அனைத்து நண்பர்களும் மகிழ்ச்சியை கொண்டாட ஆரம்பித்துவிட எனக்கோ மனதில் நடுக்கத்துடன் பயம் அதிகமானது.

அடுத்ததாக என் பெயர் வந்தது. "யாருப்பா இங்க கதிரவன்" என் கால்கள் விரைந்தன அவரை நோக்கி... என் மதிப்பெண்ணை பார்த்து என்னாலே என்னை நம்ப முடியவில்லை, 1138/1200 நண்பர்களை காட்டிலும் நான்தான் அதிக மதிப்பெண். சந்தோசத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டேன். வழியில் சைக்கிளில் வந்த என் அண்ணனிடம் சொல்லிவிட்டு,வீட்டில் என் அப்பாவிடம் சொன்னதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி.அவருக்கு அந்த மதிப்பெண்ணின் என் எதிர்காலத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். பள்ளியில் ஒட்டிய பலகையைப் போய் பார்த்தால் நான் பள்ளியிலே மூன்றாமிடம், யாரும் எதிர்பார்க்காத ஒன்று ஏனென்றால் சாதரணமாக படிக்கும் இவன் இந்த இடத்தை பிடிப்பான் என்று யாரும் எதிர் பாராதது. மறக்க முடியவில்லை அந்த ஒரு தினத்தை.

நான் இந்த ஆங்கிலம் மிரட்டும் பள்ளியில் சேர்ந்து +1 ல் நடந்த முதல் தேர்வில் எடுத்த மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு சற்று கூட அவ்வளவுதான். மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்கு பள்ளிக்கு என் அப்பாவோடு சென்று வாங்கிவிட்டு வரும் வேளையில் தலைமை ஆசிரியரை பார்க்க என் அப்பா விரும்பினார். எனக்கோ அவரிடம் செல்ல சற்றே தயக்கம், அவரிடம் எப்படி ஆங்கிலத்தில் பேசி சமாளிப்பது எப்படி என்று. என் சான்றிதழை அவரிடம் அப்பா கொடுத்து, "நீங்க +1 சீட் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்களே, இப்போ 3rd வந்திருக்கான்" என்று மிக்க ஆணவத்தோடு கூறினார். ஆம் நான் பத்தாம் வகுப்பு தமிழ் வழி படித்த ஒரே காரணத்துக்காக என்னை இந்த பள்ளியில் சேர்க்க முடியாது என்று அன்று அவர் சொன்னார், ஆனால் என் அப்பாவின் நண்பர் ஒருவர் சிபாரிசு செய்ததில் கிடைத்தது இந்த பள்ளியில் அனுமதி. ஆனால் அதை இப்போது நான் மறந்திருந்தாலும் என் அப்பா மறக்கவில்லை.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது, அடுத்த கட்டம் எல்லா மாணவர்கள் போல இன்ஜினியரிங் ஆசை என்னையும் விடவில்லை, 12 ஆம் வகுப்பு அரையாண்டு வரை அதை பற்றி ஒரு ஆர்வமில்லாமல் இருந்த எனக்கு என் அண்ணனின் வார்த்தைகள் என்னை அந்த படிப்பை திரும்பி பார்க்க வைத்தது. நுழைவுத்தேர்வில் எவ்வளவோ என்னை தயார் படுத்தியும் என்னால் அதிகமாக மதிப்பெண் பெற முடியவில்லை. +2 மதிப்பெண் இதனுடன் சேர்த்து பார்க்கும் பொழுது நம்பிக்கை கொஞ்சம் இருந்தது.
எத்தனை தனியார் கல்லூரிகள் இருந்தாலும் எனக்கோ அரசு பொறியியல் கல்லூரியில் சேர்வதில்தான் தனி ஆர்வம், ஏனென்றால் அங்குதான் கல்லூரியில் படித்தவுடனே அங்கேயே சுலபமாக வேலை கிடைத்து விடுமென்று அனைவரின் சொல் கேட்டதால். என் அப்பா தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் எடுக்கலாம் என்று எவ்வளவோ சொல்லியும் நான் அரசு கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் தேர்ந்தெடுத்தேன். எனக்கு அப்போது கிடைத்ததும் அதுதான். அந்த கல்லூரியில் முதல் ஆண்டு நன்றாக படித்தால் 2 ஆம் ஆண்டு நுழையும்போது நம் மதிப்பெண் ஏற்றாற்போல் நாம் கேட்கும் துறையை அவர்கள் தருவார்கள். அந்த நம்பிக்கையில் நானும் தயக்கமில்லாமல் சேர்ந்தேன்.

எனக்கு இங்கு படிப்பதில் கொஞ்சம் பெருமையாக இருந்தது, கூடவே என் பள்ளி நண்பர்களுக்கும் அதிலே நல்ல துறைகளில் இடம் கிடைத்தது. அவர்களும் மகிழ்ச்சியாக அவரவர் பாதையை அமைத்துக் கொண்டனர். அப்போது எங்கள் ஊரில் இன்ஜினியரிங் படித்தவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சம் குறைவுதான். எங்கள் வீட்டருகினில் இருக்கும் முருகன் அண்ணா, இவர் அங்கு படித்துவிட்டு நல்ல கம்பெனியில் வேலை செய்கிறார் என்று என் அண்ணனும் அப்பாவும் அடிக்கடி சொல்வார்கள். அவரை எனக்கு முன்னோடி என்று வைத்துக் கொண்டேன். பக்கத்து தெருவில் மற்றொருவர் அவ்வளவுதான் எனக்கு தெரிந்தது.

இதோ இப்போது நானும் அந்த எண்ணிக்கையில் ஒன்றை அதிகமாக்கினேன். வாழ்க்கையில் எவ்வளவோ கனவுகளுடன் அதை எப்படியும் சாதித்துவிட முடியும் என்ற சந்தோசத்தோடு ஆரம்பித்தேன் என் கல்லூரி வாழ்க்கையை....

முதல் நாள் கல்லூரி….

(தொடரும்.)


என்றும் அன்புடன்
கருணா

Wednesday, July 18, 2007

தபூசங்கரின் 'தேவதைகளின் தேவதை'


இந்த 'தேவதைகளின் தேவதை' ஆனந்தவிகடனில் வந்த
கவிதைகளின் தொகுப்பு...
அவற்றில் சிலவற்றை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு தாய் தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல் உன்னை எனக்குக் காட்டியது

எதற்காக நீ
கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம்
உட்கார்ந்திரு
போதும்!

நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தை எல்லாம்
இந்தப் பூமி மட்டுமே
தரிசிக்க முடிகிறது!
ஒரேயொரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்!
வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது வானம்!

முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப்

பார்த்து விட்டுத்
தவமிருக்கிறேன்.

கர்ப்பக் கிரகம்
தன்னைத் தானே
அபிஷேகம் செய்து கொள்ளுமா
என்ன?
நீ சொம்பில் நீரெடுத்துத்
தலையில் ஊற்றிக் குளித்ததைப்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான் கேட்டுக்
கொண்டிருக்கிறேன்
என்னை நானே!

நீ யாருக்கோ செய்த
மெளன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்செத்துவிடத் தோன்றியது.

நான் உன்னைக்
காதலிக்கிறேன்
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்து விடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது!


அன்புடன்
கருணா

Friday, July 13, 2007

நீ. நான்.. காதல்...


கனவுக்கும் கவிதைக்கும்
இடையில் சற்றே கண் மூடிய சமயத்தில்
கமுக்கமாய் பிறந்த காதலி நீ...

நீ உன் தாயின் வயிற்றில்
கருத்தரிக்கும் முன்னரே
என் காதல் உனக்காக கருவுற்றது...

கவிதை காதல்
காவியம் ஓவியம்
கலை சிற்பம்
இவையனைத்தும் தங்கும் ஓரிடம் நீ...

நீ எனை காணும் நாளெல்லாம்
எனக்கு கவிதை திருநாள்
காண மறக்கும் நாளெல்லாம்
காற்றில்லா வெறும் நான்...

விடுமுறை விரும்பாத
உன் வெட்கத்திடம் வீழ்ந்தது
என் காதல்...

அன்புடன்
கருணா

Thursday, March 15, 2007

ஞாநியின் எழுத்துப்பிழைகள்(1)

"மின்மினி பூச்சிகள்"

அவளைக் காணும் ஆசையில்
பூமிக்கு வந்து உருமாறி திரியும்
நட்சத்திர கூட்டங்கள்!...


"குற்றவாளி"

வனவிலங்குகள் வதைப்பு சட்டத்தின் கீழ்
குற்றவாளியாய் நான் இன்று!
உனக்கு அட்சதையாக்கி தூவ
சின்ன சின்ன பட்டாம்பூச்சிகளை
சேர்ப்பதாய் என் மீது வழக்கு!...

"விழி"

அன்பே என் கண்களை சற்று உற்று நோக்கு!
என் இதயத்தில் குடிகொண்டிருக்கும் நீ
எட்டிப்பார்ப்பது தெரியும்!...


"விடுகதை"

இரண்டு வானவில்
மத்தியில் சிகப்பு நிலா
இவையனைத்தும் ஒரு மூன்றாம் பிறையில்!
விடுகதை அல்ல!
அவளின் நெற்றியை சொன்னேன்!...

"மயிலிறகு"

உன் காதோரம் சுழன்றிருக்கும்
கார்குழலை சற்று இரவல் கொடு!
என் புத்தகத்தில் நான் பதுக்கி வைத்த
மயிலிறகை நேற்று முதல் காணவில்லை!...

"முத்துக்கள்"

அவளின் பல் வரிசைக்காக
பிரம்மன் எடுத்த முயற்சியில்
ஆழியில் வீசியெறியப்பட்ட எஞ்சிய கழிவுகள்!...


இவையனைத்தும் என் நண்பர் ஞாநியின் எழுத்துப்பிழைகள்
(படித்ததும் பிடித்தது)

பிழைகள் தொடரும்....

அன்புடன்
கருணா

Tuesday, March 13, 2007

காதல் கடல்




அன்புடன்
கருணா

Saturday, March 10, 2007

காதல் களம்


ஒவ்வொரு இரவும் என் கண்ணாடி முன்னே
நான் பழகி பார்க்கிறேன்
என் இதயத்தில் இருப்பதை
எப்படி சொல்வதென்று
ஒவ்வொரு காலையும்
மகிழ்ச்சி பொங்கியிருக்கும் என் இதயத்தோடு
போருக்கு என்னை ஆயத்தப்படுத்துகிறேன்...
என் போர்
"என் இனியவளுக்கு எப்படி என் காதலை சொல்வதென்று"
ஆனால் நீ என் முன்னெ வரும் நேரம்
வார்த்தைகள் தொலைந்து போகிறது!...
உன் முகத்தைப் பார்த்து
என் கண்கள் சிலையாகிறது!...
முகத்தை கண்ட பிறகு
எப்படி சொல்லாமல் இருப்பது சொல்...
இதோ சொல்லப்போகிறேன்
"நீதான் என் முழு உலகம்"
உன் புன்னகையில் என்னை மறந்தேன்
அதனால் மீண்டும் தோல்வியே!...
மனதினில் சுகமான, சுமையான ஏக்கங்கள்
சுமையானது
"மீண்டும் என் காதலை சொல்ல தோற்றுவிட்டேன்"
சுகமானது
"உன்போல் அழகான தேவதையிடம் தோற்றதினால்"
என் மனம் உடையவில்லை
வெற்றிபெறும் வரை போர் தொடுப்பேன்
தோல்வியில் வீழ்ந்திடமாட்டேன்
இனியவளே என்னை ஒருமுறை வெற்றிபெறவிடு,
அதன்பின் நீ சொன்னால் அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிடுவேன்....

"உன்னைத்தவிர"

அன்புடன்
கருணா

ஏற்றமும் இறக்கமும்...

ஏற்றம்.....

கவிதை எழுத பேனா தேவையில்லை
காதலியும் கற்பனையும் போதும்...

இரவும் நிலவும்
கடலும் அலையும்
கல்லும் கலையும்
காதலும் கற்பனையும்
பூக்களும் மென்மையும்
அடுத்தென்ன நீயும்
என் கவிதையும்தான்....

எல்லோரும் சொல்கிறார்கள் தூக்கத்தில்
நான் உளறுகிறேன் என்று அவர்களுக்கு
எப்படி தெரியும் தூக்கதிலும்
நான் உன்னை கவி பாடுகிறேன் என்று.....



......இறக்கம்

அவள் கப்பல்விட்டு விளையாடுகிறாள்
கடலில் இல்லை என் கண்ணீரில்....

என் இதயக்கண்ணாடியில்
உன் பிம்பத்தை பார் என்றேன்
கல்லெறிந்துவிட்டு சென்றாய்.......

நான் இறந்ததற்கு அவள் மெளன அஞ்சலி
செலுத்தினாள் ஆனால் அவளுக்கு தெரியாது
நான் இறந்ததற்கு அவள் மெளனம் தான் காரணம் என்று...

தொடரும்

அன்புடன்
கருணா